நடிகர் விஷால், தனது ‘விஷால் பிலிம் பேக்டரி’ சார்பில் படங்கள் தயாரிக்கும் நோக்கத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை பெற்றது, அந்த கடனை செலுத்த முன் வந்தது லைகா நிறுவனம். அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தமும் செய்தது. அதை மீறி, ”வீரமே வாகை சூடும்” என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ரூ.15 கோடியை டெபாசிட் செய்யவும் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்று லைகா நிறுவனம் தன் மீது அவதூறு பரப்பி தனக்கான பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது என்று குற்றம்சாட்டினார். மேலும், லைகா நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் கடன் பெறவில்லை என்றும் கடன் பாக்கி வைக்கவில்லை என்றும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை லைகா நிறுவனம் செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து அவர்களுடைய சொத்துகளை முடக்க வேண்டும் என்று தான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஷாலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே நடந்த பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக கணக்கு தணிக்கையாளரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தரப்பு கோரிக்கை குறித்து லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.