வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த கிளிம்ஸ் வீடியோ ‘விஸ்வாசத்துல மனுஷங்களுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா எப்பவும் நாய் தான் ஜெயிக்கும். ஆனா அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா ஜெயிக்கிறது என்னைக்குமே சொக்கன் தான்’ என்ற வசனம் மூலம் சூரி விஸ்வாசத்தின் மறு உருவம் என்பதை நிறுவுகிறது வீடியோ. ஸ்லோமோஷனில் வசனத்துக்கு ஏற்ற காட்சிகள் வந்து செல்கின்றன. பின்னணியில் செங்கல் சூளை காட்டப்படுகிறது. மேலும் சசிகுமார் முதலாளியாக காட்சிப்படுத்தப்படுகிறார். சூரியின் தோற்றம் எளிய மக்களை பிரதிபலிக்கிறது. ஆகவே, கதை செங்கல் சூளையை பின்னணியாக கொண்டு உழைக்கும் மக்களுக்கான கதையாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை கவனம் பெறுகிறது.