விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், பேபி இயல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘மிஷன் – சாப்டர் 1’.
தனது மகள் சனாவுடன் (பேபி இயல்) சிங்கிள் ஃபாதராக வாழ்ந்து வருகிறார் குணசேகரன் (அருண் விஜய்). மகளுக்கு ஏற்பட்டிருக்கும் நோயைக் குணப்படுத்த குழந்தையுடன் லண்டன் செல்கிறார். எதிர்பாராவிதமாக அங்கே ஒரு கும்பலுடனான சண்டையில் லண்டன் போலீஸுடனும் அருண் விஜய் மோத, அங்கேயே சிறையில் அடைக்கப்படுகிறார். அதே சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் சிலர் வெளியே தப்பிவிடத் திட்டம் போடுகின்றனர். அவர்களின் அந்த மிஷன் நிறைவேறியதா, அருண் விஜய் குழந்தையைக் காக்கும் தன்னுடைய மிஷனில் வெற்றிப் பெற்றாரா என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.
வழக்கமான அதே மிடுக்குடன் அருண் விஜய். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய மெனக்கெடல் நன்கு வெளிப்படுகிறது. ஆனால், எமோஷன் காட்சிகளில் அந்த உணர்வு சரியாகக் கடத்தப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஃப்ளாஷ்பேக் காட்சியில் வரும் அருண் விஜய்யை அதே பாணியில், பல படங்களில் பார்த்திருப்போம். ‘லியோ’ புகழ் பேபி இயல், இதிலும் வசன உச்சரிப்பு, முக பாவனை என நன்றாகவே நடித்திருக்கிறார்.
மலையாள நடிகை நிமிஷா சஜயன், இதில் லண்டன் செவிலியர் கதாப்பாத்திரத்தில் வருகிறார். ஆனால் ஒரு கமர்ஷியல் படத்தில் ஹீரோயினுக்கு எந்தளவுக்குக் கதாபாத்திரம் இருக்குமோ, அவ்வளவுதான் இங்கேயும்! மலையாளியாகவே வருகிறார், தனக்குக் கொடுக்கப்பட்டதை சிறப்பாகச் செய்திருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு, மீண்டும் தமிழில் நடித்திருக்கிறார் எமி ஜாக்சன். தமிழ் பேசும் வெளிநாட்டவராக மட்டும் காட்டாமல் அந்தச் சிறையின் ஜெயிலர் கதாபாத்திரம் என வெயிட்டான ரோல்தான். பயங்கர பில்டப்பாக அறிமுகமாகும் எமி ஜாக்சன், அந்த அறிமுகத்துடனே ஆஃபாகிறார். நாட்டின் மிகப்பெரிய சிறையின் ஜெயிலராகக் காட்டி, பின்னர் அவர் சிறையில் என்ன நடந்தாலும் வேடிக்கை மட்டுமே பார்ப்பது போன்ற காட்சிகள் அந்தக் கதாபாத்திரத்தை டம்மியாக்கிவிட்டது. இன்டர்வெல் ப்ளாக்கில் உண்மையில் அருண் விஜய் யார், என்ன வேலை செய்துகொண்டிருந்தார் என்பது தெரிய வர. அது ஒன்று மட்டுமே படத்தின் வாவ் ஃபேக்டர்.
குறைவான காட்சிகள்தான் லண்டனின் வெளிப்புறத்தில் எடுத்திருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் செட்தான். இதில் சந்தீப் கே.விஜய்யின் ஒளிப்பதிவு ஓகே ரகம். அத்தனை பேரை வைத்து சிறையில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள்தான் அவருக்கான இடம். அதை நன்றாகக் கையாண்டிருக்கிறார். பெரும்பாலான காட்சிக்ள் சிறைச்சாலை செட்டில்தான் என்பதால், அதில் இன்னும் கூடுதல் மெனக்கெட்டிருக்கலாம். லண்டனில் நடப்பதால் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஃபைட் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், புதுமையாகவே எதுவுமில்லை என்பதுதான் சோகம்.
மஹாதேவ் என்பவர்தான் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். அவை புதுமையாக இல்லாதது பெரிய மைனஸ். தப்பில்லாமல் தமிழ் பேசும் பாகிஸ்தான் தீவிரவாதி, கோவையில் சாதாரணமாக குண்டு வைக்கும் தீவிரவாதிகள், நல்ல இஸ்லாமியர் – கெட்ட இஸ்லாமியர் அறிவுரைகள் போன்ற வழக்கொழிந்துப் போன அபத்தங்களும், ‘ஜீ20’ மாநாட்டைக் குறிவைக்கும் தீவிரவாதிகள், அவர்களின் ‘மிஷன் தஸ்ரா’ திட்டம் போன்றவையும் எழுத்துக் குழுவின் சமகால அரசியல் புரிதலின் போதாமையையே காட்டுகின்றன.
சின்ன சின்ன விஷயங்களிலிருந்து ஆழமான கதைகள் வந்துகொண்டிருக்கும் சூழலில், ஒரு பிரமாண்ட கேன்வாஸ் கிடைத்தும் அதை வீணடித்திருக்கிறார் இயக்குநர் விஜய். அவரின் சமீபத்திய சுமார் ரகப் படங்களில் இதுவும் ஒன்று என்பதாக மட்டுமே சுருங்கி நிற்கிறது இந்த ‘மிஷன்’.