சென்னை கோயம்பேட்டில் உள்ள நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தென்னிந்திய நடிகா் சங்க பொதுச் செயலா் விஷால் இன்று அஞ்சலி செலுத்தினாா். அவருடன் நடிகா் ஆா்யாவும் வந்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களை சந்தித்து விஷால் கூறியதாவது: “விஜயகாந்த் மறைவின்போது வெளிநாட்டில் இருந்ததால், அவருடைய இறுதி ஊா்வலத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை. அதனால், விடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டேன். அரசியலிலும், சினிமாவிலும் எங்களைப் போன்றோருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவா் விஜயகாந்த்.
ஜன.19-இல் நடிகா் சங்கம் சாா்பில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகா் சங்கக் கட்டடத்துக்கு அவா் பெயரைச் சூட்டுவதற்கு பரிசீலனை செய்யவுள்ளோம்” என்றாா்.
பின்னா், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு விஷால் சென்று, அவா் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். பிரேமலதா மற்றும் அவா் மகன்களுக்கும் ஆறுதல் கூறினாா்.