அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் அபிலாஷ் தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரூட் நம்பர் 17. இந்த படத்தின் டிரைலர் வெளியான போதே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த வாரம் டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா, ஹரிஷ் பேரடி, அகில் பிரபாகர், அனுஸ்ரீ போத்தன், ஜார்ஜ், நிகில் அமர், அருவி மதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒசேப்பச்சான் இசையமைக்க பிரசாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் தொடக்கத்தில் தென்காசி அருகில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு ஒரு காதல் ஜோடி காரில் பயணம் செய்கின்றனர், விடுமுறையை கழிக்க அன்று இரவு அந்த நடுக்காட்டில் தங்குகின்றனர். அவர்களை ஒரு காட்டுவாசி பிடித்து குகையில் அடைத்து விடுகிறார். பின்பு அவர்களை தேடி போலீஸ் வருகின்றனர். இறுதியில் என்ன ஆனது? அந்த இரண்டு பேரையும் போலீசார் காப்பாற்றினார்களா? என்பதே ரூட் நம்பர் 17 படத்தின் கதை. இயக்குனர் அபிலாஷ் தேவன் இயக்கத்தில் உருவான இரண்டாவது படம் இது என்றாலும் முதல் படம் இன்னும் வெளியாகவில்லை. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் வடிவில் உருவாகியுள்ள இந்த படம் டெக்னிக்கலாக சிறப்பாக உள்ளது. ஒரு த்ரில்லர் படத்திற்கு ஏற்றவாறு ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என கச்சிதமாக உள்ளது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஜித்தன் ரமேஷ் இதுவரை இல்லாத வகையில் ஒரு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சு பாண்டியா நடித்துள்ளார். அரசியல்வாதியாக வரும் ஹரிஷ் பேரடி, போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் அருவி மதன் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தில் அதிகபட்ச காட்சிகளில் வருவது இவரே. இந்த படத்திற்காக அனைவரும் கடும் உழைப்பை போட்டுள்ளனர் என்பதை படம் பார்க்கும்போது நமக்கு தெரிகிறது. முன்னதாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் 55 டிகிரி செல்சியஸில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக இயக்குனர் குறிப்பிட்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படத்தின் முதல் பாதி அதிரடியாக சென்றாலும், இரண்டாம் பாதி சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. ஜாக்கி ஜான்சனின் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. படத்தில் வரும் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் படத்துடன் நம்மை ஒன்ற விடாமல் செய்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இன்னும் சற்று கூடுதல் டீடைலிங் செய்திருக்கலாம்.