Wed. Dec 4th, 2024
Spread the love

தேமுதிக தலைவரும், பிரபல நடிகரும், கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். தொடர்ந்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகர், சண்முக பாண்டியன் ஆகியோர் முன்பு செல்ல உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
இரண்டு பேரும் ஊர்வலத்தின் போது கண்ணீர் விட்டு கதறி அழுதபடி வந்தனர். இது பார்ப்போரை கண்கலங்க வைத்தது. சுமார் 3 மணி நேரம் ஊர்வலத்திற்கு பிறகு விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள், தேமுதிக கட்சி தொண்டர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், நடிகர்கள்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பல் வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அதே நேரத்தில் விஜயகாந்த் மறைவை கேட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள் சாரைசாரையாக வரத் தொடங்கினர். இதனால் கோயம்பேடு பகுதியே மக்கள் வெள்ளத்தில் அலையலையாய் பெருகத் தொடங்கியது. எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் வாகனங்களில் சென்னை வந்து குவிந்தனர். இதனால், கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால், நேற்று முன்தினம் மாலை தொடங்கி விடியவிடிய பொதுமக்கள் நீண்ட வரிசையில் அஞ்சலி செலுத்தினர். கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்ததால், விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சென்னை தீவுத் திடலில் இடம் ஒதுக்கப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மின்னல் வேகத்தில் கவனித்தனர்.
தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் நேற்று அதிகாலை 5.14 மணியளவில் வாகனம் மூலம் தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது. விஜயகாந்த் உடல் இருந்த வாகனம் பூந்தமல்லி நெடுஞ்சாலை சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது. பொதுமக்கள் வழிநெடுகிலும் இருபுறமும் நின்று விஜயகாந்த் உடலுக்கு அதிகாலையிலும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீவுத்திடலில் மேடை அமைக்கப்பட்டு அதில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது.
விஜயகாந்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் சென்னை தீவுத்திடலில் குவிந்திருந்தனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கேப்டன், கேப்டன் என்று அழைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தீவுத்திடலுக்கு காலை 6.30 மணிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, ரகுபதி, மு.பெ.சாமிநாதன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவாக தலைவர் வேல்முருகன், கொமதேக தலைவர் ஈஸ்வரன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், வேலூர் விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், டி.ராஜேந்தர், அருள்நிதி, தாமு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அது மட்டுமல்லாமல் இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் விஜயகாந்த் உடலுக்கு தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தீவுத்திடலில் இருந்த விஜயகாந்த் உடல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டது. சரியாக பிற்பகல் 2.45 மணியளவில் விஜயகாந்த் உடல் இருந்த வாகனம் கோயம்பேடு நோக்கி புறப்பட்டது.
வாகனத்தில் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொது செயலாளருமான பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகர், சண்முக பாண்டியன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். வாகனத்தில் பிரேமலதா, விஜய பிரபாகர், சண்முகபாண்டியன் ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே சென்றனர். ஏராளமான மக்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டு நடந்து சென்றனர். தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் சிவசாமி சாலை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வழியாக சென்றது. இந்த தூரத்தை கடக்கவே சுமார் 1 மணி நேரம் ஆனது.
தொடர்ந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இறுதி ஊர்வல பாதையில் அணிவகுத்து சென்ற தொண்டர்கள், ‘வீரவணக்கம், வீரவணக்கம்.. கேப்டனுக்கு வீரவணக்கம்’ என்று முழக்கமிட்டபடி சென்றனர். அதே நேரத்தில் தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரை சாலையில் இருபுறமும் மக்கள் திரண்டு வந்து விஜயகாந்துக்கு கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும் விஜயகாந்த் உடல் கொண்டுவரப்பட்ட பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. சரியாக 5.45 மணியளவில் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. வாகனத்தில் இருந்து விஜயகாந்த் உடலை போலீசார் தோளில் வைத்து சுமந்து அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு வந்தனர்.
விஜயகாந்தின் உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டது அதில் ’புரட்சிக் கலைஞர் கேப்டன்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. மேலும் நிறுவனத் தலைவர், தேமுதிக என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. விஜயகாந்த்தின் பிறப்பு, இறப்பு தேதிகளும் அந்த பேழையில் இடம் பெற்றிருந்தன.
முன்னதாக விஜயகாந்த் உடலுக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தராஜன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அடுத்து அங்கு வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். மேலும் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் காவல்துறையின் அணிவகுப்புடன் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 24 போலீசார் மூன்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து குடும்ப முறைப்படி தமிழில் மந்திரங்கள் முழங்க விஜயகாந்துக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
பொதுமக்கள் விஜயகாந்தின் உடல் அடக்கம் நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் 8 எல்.இ.டி.திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் வழியாக விஜயகாந்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை தொண்டர்கள், பொதுமக்கள் பார்த்தனர்.
இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு விஜயகாந்த் உடல் இரவு 7 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது தேமுதிக அலுவலகத்தை சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் கேப்டன்… கேப்டன் என்று கோஷம் எழுப்பி கண்ணீர் விட்டு அழுதனர்.

By Nisha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *